கொடைக்கானலில் கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைப்பதை கண்டித்து உண்ணாவிரதம்
கொடைக்கானலில் கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைப்பதை கண்டித்து கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக, முதற்கட்டமாக 39 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன. அடுத்த கட்டமாக, கொடைக்கானலில் உள்ள 1,415 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் முயற்சியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் நேற்று முன்தினம் 35 தங்கும் விடுதிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே கொடைக்கானலில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தநிலையில் கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைப்பதை கண்டித்து கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கொடைக்கானலில் வசிக்கும் பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர், பங்கு தந்தையர்கள், வர்த்தக சங்கத்தினர், அனைத்து சமூக நல அமைப்பினர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
கொடைக்கானலில் உள்ள கட்டிடங்களை பூட்டி ‘சீல்‘ வைக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்தி முறைப்படுத்த வேண்டும். எந்தெந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட உள்ளது என்று பட்டியல் வெளியிட வேண்டும். ஒவ்வொரு தனிநபருக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
சட்டசபையில் அறிவித்தப்படி, கட்டிடங்களை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட வேண்டும். கொடைக்கானலில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங் களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
இதேபோல் கட்டிடங்களுக்கு சீல் வைப்பதை கண்டித்து, கொடைக்கானலில் வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அதன்படி கொடைக்கானல் ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், நாயுடுபுரம் உள்ளிட்ட இடங்களில் 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.