தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் லஞ்சம் வாங்கும் அலுவலர்கள், இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை சமூகநலத்துறை அலுவலர் எச்சரிக்கை
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கும் ஊர்நல அலுவலர்கள், இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டில் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 22-ந் தேதி நடந்தது. விழாவில், முதற்கட்டமாக 707 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கத்தை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர். அதைத்தொடர்ந்து 20 ஒன்றியங்களில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 293 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2-ம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு வேலூர் சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) கிறிஸ்டினா டார்த்தி தலைமை தாங்கி 1,400 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தில் 4 ஆயிரத்து 400 பேருக்கு அரசு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்க ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் தான் அதிகளவு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் பெற பயனாளிகள் ஊர்நல அலுவலர்கள், இடைத்தரகர்களிடம் லஞ்சம் கொடுக்க வேண்டாம்.
தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும். பயனாளிகளிடம் இருந்து ஊர்நல அலுவலர்கள் எக்காரணம் கொண்டு பணம் பெறக்கூடாது. அவ்வாறு பணம் பெறும் ஊர்நல அலுவலர்கள், இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருமண நிதியுதவி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.