மும்பையில் சாலையில் கிடந்த பொம்மை வெடிகுண்டால் பரபரப்பு

மும்பையில் சாலையில் கிடந்த பொம்மை வெடிகுண்டால் பரபரப்பு உண்டானது.

Update: 2019-02-27 00:13 GMT
மும்பை,

புலவாமா தாக்குதலுக்கு எதிராக இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக மும்பையில் ரெயில் நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், போரிவிலி மேற்கு கோராய் பகுதியில் பள்ளிக்கூட பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்குள்ள சாலையில் சிவப்பு நிறத்தில் வெடிகுண்டு போன்ற பொருள் கிடந்ததை பஸ் டிரைவர் கவனித்தார்.

இதை பார்த்து திடுக்கிட்ட அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் அங்கு ஏராளமானோர் திரண்டு விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. மக்கள் நெருங்கிவிடாமல் இருப்பதற்காக போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்தனர்.

இதன்பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அருகில் சென்று சோதனை செய்தனர். அப்போது அது பொம்மை வெடிகுண்டு என்பது தெரியவந்தது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பீதியை ஏற்படுத்துவதற்காகவே யாரோ ஆசாமி அதை அங்கு போட்டு சென்றது தெரியவந்தது. பொம்மை வெடிகுண்டை கைப்பற்றிய போலீசார், மர்ம ஆசாமியை கண்டுபிடிக்க அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்