ஏ.டி.எம். மையங்களில் பேட்டரி திருடிய 3 பேர் சிக்கினர்
ஏ.டி.எம். மையங்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
மும்பை ஆர்தர் ரோடு ஜெயில் அருகில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. சமீபத்தில் இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகள் மர்ம ஆசாமிகளால் திருடப்பட்டன. இதுகுறித்து வங்கி ஊழியர் அக்ரிபாடா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பேட்டரி திருட்டில் ஈடுபட்டது ஒர்க் ஷாப் உரிமையாளர் சலாலுதீன் கான் (வயது50), ஜமீல் சேக் (42), கிருஷ்ணா (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் 3 பேரும் மும்பை, தானே, பன்வெல் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 பேட்டரிகளை திருடியது தெரியவந்தது. போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 53 ஏ.டி.எம். மைய பேட்டரிகளை பறிமுதல் செய்து உள்ளனர்.