அடுத்த 4 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 9 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேச்சு
கர்நாடகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 9 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு,
ஆசியன் தொழில் வர்த்தக சபை மாநாடு தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளில் கர்நாடகத்தில் தொழில் தொடங்குகிறார்கள். தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. சீனா மாதிரியில் பொருட்களை உற்பத்தி செய்ய முதல்-மந்திரி நடவடிக்கை எடுத்துள்ளார். நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் இத்தகைய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 9 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த தலைமுறைக்காக பெங்களூருவை தொழில்நுட்பத்தின் மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகில் டிஜிட்டல் நகரங்களில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. உலகின் 25 சிறந்த நகரங்களில் பெங்களூரு 19-வது இடத்தில் உள்ளது.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் பேசினார்.
இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.