நாகையில் உள்ள இ-சேவை மையங்களில் இணையதள சேவை பாதிப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதி

நாகையில் உள்ள இ-சேவை மையங்களில் இணையதள சேவை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் அவதிக்குள்ளாகினர்.;

Update: 2019-02-26 22:15 GMT
நாகப்பட்டினம்,

நாகை பகுதிகளில் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. தமிழக அரசால் பொதுமக்கள் எளிதில் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு வசதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இ-சேவை மையங்களால் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நாகையில் இணையதள சேவை இயங்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது செல்போன் மற்றும் இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதால் பி.எஸ்.என்.எல். சேவை மக்களுக்கு ஏதுவாக கிடைத்து வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் முதல் இணையதள சேவை சரிவர வேலை செய்யாததால் பொதுமக்கள் வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், திருமணம், பட்டா மாறுதல் உள்ளிட்ட 21 வகையான சான்றிதழ்கள் பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அனைத்து சேவை மையங்களிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இ-சேவை மையத்திற்கு இணையதள வசதியை உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்