குடியாத்தம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்

குடியாத்தம் அருகே தமிழக, ஆந்திர எல்லையோரம் காரில் கடத்தி வரப்பட்ட 270 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-02-26 22:00 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் வனப்பகுதியில் மண்டல வனப்பாதுகாவலர் சேவாசிங், மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா, உதவி வனபாதுகாவலர் சரவணன் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர் ரவி, வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், பூபதி, சிவன், ரங்கநாதன், வனராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சைனகுண்டா, மோர்தானா உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று காலையில் தமிழக - ஆந்திர மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதியான சைனகுண்டா வனத்துறை சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து ஆந்திர பதிவு எண் உடைய காரை நிறுத்தி உள்ளனர்.

அப்போது வனத்துறையினரை கண்டதும் காரை ஓட்டி வந்த நபர்கள் வந்த வழியே காரை திருப்பி உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் காரை விரட்டி சென்றனர். ஆந்திர - தமிழக எல்லையில் கொண்டம்மா கோவில் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்த 2 நபர்கள் ஆந்திர மாநில காட்டிற்குள் தப்பி ஓடி விட்டனர்.

அதனைத்தொடர்ந்து வனத்துறையினர் காரை சோதனையிட்டபோது அதில் சுமார் 5 அடி உயரமுள்ள 270 கிலோ அளவிலான 8 செம்மரக்கட்டைகள் இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் கார் மற்றும் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து குடியாத்தம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் செம்மரக்கட்டைகள் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் ஆகும்.

இந்த செம்மரக் கட்டைகள் ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்தப்பட்டதா? அல்லது வேறு பகுதியில் வெட்டப்பட்டதா?, தமிழகத்தில் எந்த பகுதிக்கு செம்மரக் கட்டைகள் கடத்தி கொண்டு செல்லப்பட்டது என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்