டி.டி.வி. தினகரன் மீது வழக்குப்பதிவு

சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணம் நடைபெற்றபோது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக டி.டி.வி. தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-02-26 23:15 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், ‘மக்கள் சந்திப்பு புரட்சி பயணம்’ என்ற பெயரில் கடந்த வாரம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது 20-ந் தேதி சேலம் மாநகர பகுதியான சூரமங்கலம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் நிறுத்தத்தில் இரவு 11 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை வைத்து பிரசாரம் செய்தார்.

இதனிடையே தாதகாப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது மனைவி மேனகாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது அந்த பகுதியில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் சாலையை மறித்து நின்றதாகவும், அதனால் மேனகாவை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஸ்ரீதர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டி.டி.வி. தினகரன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடாசலம், எஸ்.கே.செல்வம் உள்பட பலர் மீது சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் கெங்கவல்லி, மல்லியகரை, தம்மம்பட்டி ஆகிய இடங்களில் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார். இந்த பகுதிகளிலும் 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்தது தொடர்பாக 3 போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே டி.டி.வி. தினகரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்