பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் சாவு பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் நேற்று பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் வரகனூர் கிராமத்தில் அய்யாச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இருந்தது. இந்த பட்டாசு ஆலையில் கடந்த 22-ந்தேதி மதியம் தொழிலாளர்கள் சாப்பிட சென்றபோது, திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை தரைமட்டமானது.
இந்த வெடி விபத்தில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த நீதிராஜ் (வயது 50), வரகனூரைச் சேர்ந்த அன்னராஜ் மனைவி கிருஷ்ணம்மாள் (55), மாரியம்மாள் (48), ஏழாயிரம்பண்ணை மேல சத்திரத்தைச் சேர்ந்த ஜெயக்கண்ணன் மனைவி கஸ்தூரி (45) ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த திருத்தங்கலை சேர்ந்த தொழிலாளி பெரியசாமி (46) கடந்த 23-ந் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை உரிமையாளர் அய்யாச்சாமியை கைது செய்தனர்.
இதற்கிடையே, வெடி விபத்தில் படுகாயம் அடைந்த ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த தமிழ்மாலை மனைவி கருப்பாயி (54) உள்ளிட்ட 10 பேர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மற்றும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கருப்பாயி ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நேற்று காலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.