கள்ளக்குறிச்சியில் 3 குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்த கொடூர தந்தை

கள்ளக்குறிச்சியில் பெற்ற தந்தையே 3 குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்த வீடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-26 23:00 GMT
கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் வெங்கடேசன்(வயது 33). தொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு இனியா(5), அயன்யா(4), ஜெகன்வர்மா(3) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் குடிப்பழக்கம் உடையவர் ஆவார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வீரம்மாள் தற்கொலை செய்து கொண்டார். இதனால் குழந்தைகள் அனைவரும் வெங்கடேசனின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், வெங்கடேசன் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், குழந்தை ஜெகன்வர்மாவை அடித்து துன்புறுத்தும் வெங்கடேசன், தான் பெற்ற மகன் என்று கூட பாராமல் அவனது தொடையில் சூடு வைக்கிறார். அதேபோல் அயன்யாவை பிஞ்சு குழந்தை என்று கூட பராமல், இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு முன்பு நடுரோட்டில் போட்டு இரும்பு கம்பியால், ஏதோ மாட்டை அடிப்பது போன்று அடித்து சித்ரவதை செய்கிறார்.

அப்போது அவள் அப்பா விட்டுவிடுங்கள், விட்டுவிடுங்கள் என்று சாலையில் உருண்டு புரண்டு கதறி அழுகிறாள். இந்த காட்சியை பார்ப்பவர்களுக்கு கண்களில் கண்ணீர் சிந்தும் அளவிற்கு கோரமாக இருக்கிறது.

மேலும் அந்த குழந்தையின் இருகால்களையும் கட்டி தலைகீழாக தூக்கி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து, கல்நெஞ்சம் கொண்ட தந்தையாக அவர் நடந்து கொள்ளும் காட்சி அதில் உள்ளது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் வந்து, அந்த சிறுமியை அங்கிருந்து மீட்டு செல்கிறார்கள்.

இதேபோல் மற்றொரு மகள் இனியாவை அங்கு கிடந்த ஜல்லி கற்களில் தள்ளிவிட்டு, அவளது முகத்தில் வெங்கடேசன் சிறுநீர் கழிக்கும் கொடூரமான காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. பெற்ற குழந்தைகளின் மீது பாசம் இன்றி, அரக்கனைப்போல் நடந்து கொண்ட வெங்கடேசனின் இந்த செயல் சமூக வலைத் தளங்களில் பலரால் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுத்து, குழந்தைகளை பத்திரமாக மீட்பதுடன், அவர்களது எதிர்காலத்திற்கு வழிகாட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த வீடியோவை பார்த்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், கடந்த 21-ந்தேதி சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் அவர் சந்தித்து, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

இரக்கமற்ற தந்தையின் இத்தகைய கொடூர செயல் கடந்த 12-ந்தேதி நடந்தது என்பதும், இதை அந்த பகுதியை சேர்ந்த யாரோ செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதுபற்றி அதிகாரி நெப்போலியன் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். தற்போது குழந்தைகள் 3 பேரும் தங்களது உறவினர் கள் வீட்டில் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகள்