சின்னசேலம் அருகே, பிளஸ்-1 மாணவி, விஷம் குடித்து தற்கொலை - தாய் கண்டித்ததால் விபரீதமுடிவு

சின்னசேலம் அருகே அதிகமாக உணவு தயாரித்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-;

Update: 2019-02-26 23:00 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள நாககுப்பம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவரது மகள் பவித்ரா(வயது 17). இவர் அதேஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று பவித்ரா வீட்டில் அளவுக்கு அதிகமாக மதிய உணவை சமைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவருடைய தாய் செல்வி, ஏன் உணவை அதிகமாக சமைத்தாய்? என கேட்டு பவித்ராவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பவித்ரா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவித்ரா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகமாக உணவு சமைத்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்