15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-02-26 22:45 GMT
குஜிலியம்பாறை,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) முத்துகுமரன் முன்னிலை வகித்தார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு என்று தனியாக வட்டார வளர்ச்சி அலுவலரை நியமனம் செய்து, ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களையும் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வீரகடம்ப கோபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் (தணிக்கை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி நாகராஜ் வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டம் குறித்து செயலாளர் விஜயன் விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட தலைவர் ராஜசேகர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்