திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து மீன் வியாபாரி பலி; டிரைவர் படுகாயம்
திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த மீன் வியாபாரி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துபோனார். டிரைவர் படுகாயமடைந்தார்.
திருமங்கலம்,
நாகர்கோவில் அருகே உள்ள எரும்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெலஸ்டின் (வயது 59). இவர் அப்பகுதியில் மீன் மற்றும் கருவாடு வியாபாரம் செய்து வந்தார். மேலும் கருவாடு, மீன்களை கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்தும் வந்தார்.
இந்தநிலையில் நாகர்கோவிலில் இருந்து வியாபாரம் தொடர்பாக ஜெலஸ்டின் கோவைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை நாகர்கோவிலை சேர்ந்த டிரைவர் சதீஸ் என்பவர் ஓட்டி வந்தார்.
அவர்கள் வந்த கார், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வெள்ளக்குளம் பிரிவில் வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் தடுப்பில் மோதி, சாலையோர பள்ளத்தில் அந்த கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் சென்ற வியாபாரி ஜெலஸ்டின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். டிரைவர் சதீஸ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.