பாகிஸ்தானில் இந்திய விமானப்படை குண்டு வீச்சு மத்திய படை வீரர்களுக்கான குடியிருப்பு திறப்பு விழா திடீர் ரத்து

பாகிஸ்தானில் இந்திய விமானப்படை குண்டு வீச்சு நடத்தியதை தொடர்ந்து, காரைக்குடியில் நடக்க இருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களுக்கான குடியிருப்பு திறப்பு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.

Update: 2019-02-26 22:45 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவு இயங்கி வருகிறது. இதில் 1,013 வீரர்களும் அதிகாரிகளும் உள்ளனர். இங்குள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக 123 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.

விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் மதியம் 3 மணிக்கு திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கமாண்டன்ட் ஸ்ரீராம் தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இதற்காக மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் ஐ.ஜி. விக்ரம், டி.ஐ.ஜி வினய் காஜ்லா ஆகியோரும் வருகை தந்திருந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தானில் புகுந்து குண்டுகள் வீசி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தன.

இதனால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலைகளால் மத்திய உள்துறை மந்திரி பங்கேற்கும் காணொளி காட்சி மூலம் நடக்க இருந்த புதிய குடியிருப்பு திறப்பு விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரைக்குடி அமராவதி புதூரில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை விழா ரத்து செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்