அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பழுது உடனடி சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதி

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுதாகி செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் உடனடியாக சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

Update: 2019-02-26 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி, ஒரு அரசு மருத்துவக்கல்லூரி, 7 தனியார் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. சட்டசபை வளாகம் அருகே உள்ள அரசு பொது மருத்துவ மனையில் தினமும் 3 ஆயிரம் புறநோயாளிகளும், 700-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துகளில் சிக்குபவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போது தலைக் காயத்தை கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்படுவது வழக்கம். இது அவசியமானது என்பதால் புதுவை அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ரூ.3 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி வாங்கப்பட்டது.

ஆபத்தான நிலையில் வந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு இந்த கருவி உதவியாக இருந்து வந்தது. நாளடைவில் இந்த கருவியில் பழுது ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செயல்படாமல் முடங்கியே கிடக்கிறது.

இதனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக குறிப்பிட்ட ஒரு தனியார் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ஒப்பந்த அடிப்படையில் அரசு செலுத்தி வருகிறது. நிதி நெருக்கடியில் இருந்து வரும் நிலையில் அரசுக்கு இது கூடுதல் சுமையாக உள்ளது.

தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஸ்கேன் எடுப்பதற்குள் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு உயிர்சேதம் ஏற்படும் அளவுக்கு நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகும் அவலநிலையை தவிர்க்க பொது மருத்துவமனையில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேனை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

இது குறித்து அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவனிடம் கேட்ட போது, ‘அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ஒரு தனியார் மருத்துவமனையுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கான பணத்தை அரசு செலுத்தி விடுவதால் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் தான் ஸ்கேன் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணி முழுவதுமாக முடிந்து விடும். அதன்பின் அது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதுபோன்ற தலைக்காயம் உள்ளிட்ட சிகிச்சை தேவைப்படுவோருக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்