கால் டாக்சியை போன்று வாடகைக்கு பயன்படுத்திய 40 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கோவையில், கால் டாக்சியை போன்று வாடகைக்கு பயன்படுத்திய 40 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை,
கார்களை வாடகைக்கு பயன்படுத்த வேண்டுமென்றால் போக்குவரத்து அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும். அதற்கு ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும். ஆனால் சிலர் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும் கார்களை வாடகைக்கு விட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த புகாரின்பேரில் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அத்தகைய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கோவையில் பலர் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு (பைக் டாக்சி) பயன்படுத்துவதாகவும், அதற்கான செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுவதாகவும் கோவை போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பால்ராஜ் (கோவை தெற்கு), பாஸ்கரன் (மத்திய பகுதி), குமரவேல் (வடக்கு) மற்றும் போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் கோவை பாலசுந்தரம் சாலை, காந்திபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து வந்தவர்களை போக்குவரத்து அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் வாடகைக்கு வந்தது தெரியவந்தது. இதன் மூலம் வாடகைக்கு பயன்படுத்திய 40 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப் பட்டது. அவை கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
வாடகை இருசக்கர வாகனங்களை பதிவு செய்வதற்கு செல்போன் செயலியை இரு தனியார் நிறுவனங்கள் உருவாக்கி உள்ளன. அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பலர் இருசக்கர வாகனங்களை பதிவு செய்து அதில் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கு அனுமதி கிடையாது. அந்த செயலியை உருவாக்கி உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் நோட்டீசு அனுப்பப்படும்.
இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. கார்களில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. உரிமம் உள்ளவர் தான் காரை ஓட்டுகிறார். ஆனால் இருசக்கர வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. உரிமம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் விபத்து ஏற்படுத்தினால் அதனால் பாதிக்கப்படுபவர் பின்னால் உட்கார்ந்து இருப்பவர் தான். அதனால் தான் அனுமதியின்றி வாடகைக்கு இயக்கப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசுகள் அனுப்பி அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.