முதுமலையில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ஜீப் டிரைவர்கள்

முதுமலையில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினருடன் இணைந்து ஈடுபட்ட மசினகுடி ஜீப் டிரைவர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2019-02-26 22:45 GMT
மசினகுடி, 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 23-ந் தேதி பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை அணைக்கும் பணியில் புலிகள் காப்பகத்தை சார்ந்த வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக அந்த தீயை அணைக்க முடியவில்லை.

அசுர வேகத்தில் காட்டுத்தீ மற்ற வனப்பகுதிகளுக்கு பரவியது. தீயின் வேகம் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் செய்வதறியாமல் தவித்தனர்.

ஒரே சமயத்தில் புலிகள் காப்பகத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டதால் வனத்துறை ஊழியர்கள் திணறினர். அவற்றை கட்டுப்படுத்த இரவும், பகலுமாக வனத்துறையினர் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கண்ட மசினகுடி ஜீப் டிரைவர்கள் 150 பேர் உடனடியாக வனத்துறையினருக்கு உதவியாக சென்றனர். அதன் பின்னர் வனத்துறை ஊழியர்கள் மற்றும் ஜீப் டிரைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பின் காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. அத்துடன் மரங்களில் பற்றி எரிந்து வரும் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஜீப் டிரைவர்கள் ஈடுபட்டனர்.

மசினகுடி வனச்சரகத்தில் மட்டுமின்றி அருகில் உள்ள பொக்காபுரம், சிங்காரா, ஜெகதீவன், மாவனல்லா வனப்பகுதிகளில் கடந்த 24 மற்றும் 25-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. அதனை கண்ட ஜீப் டிரைவர்கள் தாங்களாகவே அந்த இடங்களுக்கு சென்று தீயை அணைத்தனர். இதனால் அந்த வனப்பகுதிகளில் ஏற்பட இருந்த பெரும் தீ சேதங்கள் தடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வனத்துறையினருக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றையும் ஜீப் டிரைவர்கள் எடுத்து சென்று வழங்கினர்.

வனத்துறையினருடன் ஜீப் டிரைவர்கள் இணைந்து செயல்பட்டதால் புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அணைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து வனத்துறையினருக்கு உதவியாக இருந்து தீயை அணைக்கும் பணியிலும், உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்து சென்று வழங்கிய மசினகுடி ஜீப் டிரைவர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மசினகுடி வாகன டிரைவர்கள் கூறியதாவது:-

முதுமலை வனப்பகுதியை நம்பித்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். முதுமலை வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை ஜீப்களில் அழைத்து செல்வதால் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் முதுமலையில் காட்டுத்தீ ஏற்படும் போது வேடிக்கை பார்க்க முடியாது.

எனவே தான் வனத்துறையினருடன் இணைந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். முதுமலை புலிகள் காப்பகத்தில் எங்கு காட்டுத்தீ ஏற்பட்டாலும் நாங்கள் வனத்துறையினருக்கு உதவியாக இருப்போம் என்று கூறினர்.

மேலும் செய்திகள்