அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண், பெண் பள்ளிகளாக தனித்தனியாக பிரிக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை ஆண்கள், பெண்கள் பள்ளிகளாக தனித்தனியாக பிரித்து சிறப்பான பள்ளிகளாக உருவாக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.;
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவன் தியேட்டர் 60 அடி ரோட்டில் நடைபெற்றது. விழாவிற்கு மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் கோபால்சாமி வரவேற்றார். எம்.ஏ.க்கள் கே.என்.விஜயகுமார், குணசேகரன், கரைபுதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கி பேசினார்கள்.
அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆசியுடன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வி துறையில் மாணவர்களுக்கு 16 இலவச பொருட்களை வழங்கி கல்வி தரத்தை உருவாக்கியவர் ஜெயலலிதா.
அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கிய அ.தி.மு.க. அரசு, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது.
திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை ஆண்கள், பெண்கள் பள்ளி என பிரித்து சிறப்பான பள்ளிகளாக உருவாக்கப்படும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் துறைமுகத்தை விரிவுப்படுத்த போவதாக கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது.
அவர் தளபதியாக இருப்பதற்கு மட்டுமே தகுதியானவரேயன்றி தலைமை பொறுப்பை ஏற்பதற்கு தகுதியானவர் அல்ல. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.