சென்னிமலை அருகே கணவன்–மனைவி அடித்துக்கொலை: தஞ்சை பெண் உள்பட 4 பேர் கைது

சென்னிமலை அருகே கணவன்–மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தஞ்சையை சேர்ந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

Update: 2019-02-26 23:15 GMT

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையம் கோனாரிகாடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). விவசாயி. அவருடைய மனைவி துளசிமணி (60). இவர்களுக்கு ராசம்மாள் (45), சுந்தராம்பாள் (37), கோமதி (35) ஆகிய 3 மகள்களும், வெங்கடாசலம் (32) என்ற மகனும் உள்ளனர். இதில் வெங்கடாசலத்துக்கு திருமணம் ஆகவில்லை. விவசாயம் செய்து வருகிறார்.

ராசாம்பாளும், கோமதியும் தங்களது தந்தை துரைசாமியின் சொத்தில் பங்கு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 20–ந் தேதி காலை வீட்டு வாசலில் துரைசாமியும், துளசிமணியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதன்பேரில் பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாகுமார் மற்றும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். துரைசாமி, துளசிமணியின் உடல் அருகே இரும்பு கம்பிகள் கிடந்தது. அவர்கள் 2 பேரின் கழுத்து, தலை, கை, கால் என உடல் முழுவதும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் ரத்தக்காயம் ஏற்பட்டிருந்தது.

முதல்நாள் இரவு யாரோ மர்ம நபர்கள் கணவன்–மனைவி இருவரையும் இரும்பு கம்பியால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. அது பிணம் கிடந்த இடத்தின் அருகே இருந்து வீட்டின் பின்புறம் உள்ள நொய்யல் ஆறு வரை ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்களும் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ் (சென்னிமலை), மணிகண்டன் (கொடுமுடி), சப்–இன்ஸ்பெக்டர்கள் ராம்பிரபு, பரமேஸ்வரன், குமரேசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் முதலில் சொத்து தகராறில் துரைசாமியும், துளசிமணியும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதனால் துரைசாமியின் மகன், மகள்களின் செல்போன்களின் உரையாடல்களையும், அவர்கள் சம்பவம் நடந்த நாட்களுக்கு முன்னதாக யார் யாரிடம் பேசினார்கள் என்பதையும் சோதனை செய்தார்கள். ஆனால் இந்த கொலைகளில் அவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த ராஜாமுகமது (29) என்பவரின் செல்போன் அடிக்கடி எக்கட்டாம்பாளையம் பகுதி செல்போன் சிக்னலில் பதிவாகியிருந்தது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பேராவூரணிக்கு விரைந்து சென்று ராஜாமுகமதுவை ரகசியமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ராஜாமுகமதுவின் காதல் மனைவி ஷாகீராபானு (29). கணவன், மனைவி இருவரும் கடந்த சில நாட்களாக கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்வதற்காக திருப்பூர் மாவட்டம் திட்டுப்பாறையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் தேங்காய் வாங்குவதற்காக கடந்த 11–ந் தேதி துரைசாமியின் வீட்டுக்கு ராஜாமுகமதுவும், ஷாகீராபானுவும் வந்துள்ளார்கள். அப்போது 1,200 தேங்காய்களை வாங்கிவிட்டு அதை தன்னுடைய சரக்கு ஆட்டோவில் ஏற்றி திட்டுப்பாறைக்கு ராஜாமுகமது கொண்டு சென்றார். மனைவி ஷாகீராபானுவை துரைசாமியின் வீட்டிலேயே விட்டுள்ளார். அப்போது துரைசாமி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.

ராஜாமுகமது சரக்கு ஆட்டோவில் சென்றதும், ஷாகீராபானுவை தண்ணீர் குடிக்க வா என்று வீட்டுக்குள் துரைசாமி அழைத்துள்ளார். அதை நம்பி அவரும் சென்றிருக்கிறார். உடனே அவரை துரைசாமி தவறான நோக்கத்துடன் கட்டிப்பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷாகீராபானு கோபத்துடன் வெளியே வந்துவிட்டார்.

இந்த வி‌ஷயத்தை கடந்த 13–ந் தேதி கணவன் ராஜாமுகமதுவிடம் ஷாகீராபானு சொன்னார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் துரைசாமியை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் கணேசன் மகன் மணிகண்டன் (25), அதே பகுதியை சேர்ந்த இஷாஸ்அகமது (30) ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார். அவர்கள் இருவரும் உதவி செய்வதாக கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து இவர்கள் 3 பேரும் ஷாகீராபானுவுடன் சேர்ந்து கடந்த 19–ந் தேதி இரவு எக்கட்டாம்பாளையம் வந்து துரைசாமியின் வீட்டை நோட்டமிட்டுள்ளார்கள். பின்னர் திட்டுப்பாறைக்கு திரும்பி சென்றுவிட்டார்கள்.

அதன்பின்னர் 20–ந் தேதி இரவு 11.30 மணியளவில் 4 பேரும் இரும்பு கம்பிகளுடன் துரைசாமியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்கள். தூக்க கலக்கத்தில் துரைசாமி கதவை திறந்துள்ளார். உடனே 4 பேரும் அவரை சரமாரியாக இரும்பு கம்பியால் அடித்திருக்கிறார்கள். இதில் அலறியபடி ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த துளசிமணி ஓடிவந்து அவர்களை தடுத்தார். அவரையும் இரும்பு கம்பியால் அடித்துள்ளார்கள். இதில் சிறிது நேரத்தில் துரைசாமியும், துளசிமணியும் இறந்துவிட்டார்கள். உடனே ஷாகீராபானு, ராஜாமுகமது, இஷாஸ்அகமது, மணிகண்டன் ஆகிய 4 பேரும் தப்பி சென்றுவிட்டார்கள்.

இந்த நிலையில்தான் தனிப்படை போலீசாரிடம் ராஜாமுகமது சிக்கிக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஷாகீராபானு, மணிகண்டன், இஷாஸ்அகமது ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்