தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி கைது
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாயி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தேனி,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி ராயர்குளத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). விவசாயி. இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். பின்னர் அவர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த போலீசார் ஓடிச் சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீக்குளிக்க முயன்ற ராஜ்குமாரை தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், ‘தானும், விவசாயிகள் சிலரும் விவசாய தோட்டங்களின் தண்ணீர் தேவைக்காக சின்னமனூரில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்துச் செல்ல முடிவு செய்தோம். இதற்காக சின்னமனூரை சேர்ந்த குழாய்கள் பதித்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வரும் ஒருவரிடம் பணத்தை கொடுத்தோம். அவர், ஆழ்துளை கிணறு அமைத்த இடத்தை விவசாயிகள் பெயருக்கு மாற்றிக் கொடுப்பதாகவும், அங்குள்ள மின் இணைப்பை பெயர் மாற்றிக் கொடுப்பதாகவும் கூறினார். இதற்காக பணத்தை பெற்றுக் கொண்டு, பெயர் மாற்றிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். இதனால், தீக்குளிக்க முயன்றேன்’ என்றார்.
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜசேகரன் தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில், தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, ராஜ்குமார் அங்கு வந்து தீக்குளிக்க முயன்றதாகவும், அவரை தடுக்க முயன்றபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து தற்கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ராஜ்குமார் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதா வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். இந்த சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.