ஆண்டிப்பட்டி கல்லூரியில், குடிநீர் கேட்டு மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
ஆண்டிப்பட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கலைக்கல்லூரியில் பல மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கு அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ராஜகோபாலன்பட்டி ஊராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக கல்லூரிக்கு போதிய குடிநீர் வசதி செய்து தரவில்லை.
இதையடுத்து மாணவ-மாணவிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் இருந்து கல்லூரிக்கு குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் போன்ற பணிகள் செய்யப்பட்டது.
இந்த பணிகள் நிறைவுற்ற பின்னர், சிலநாட்கள் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து கல்லூரி மாணவ-மாணவிகள் நிர்வாகத்திடமும், சம்பந்தபட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராடிய மாணவ-மாணவிகள் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஆண்டிப்பட்டி தாசில்தார் அர்ச்சுனன், வட்டார வளர்ச்சி அலுவலர் எபி, ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கல்லூரிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.