5 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படும்: 4 மாதங்களில் பெங்களூரு ‘வை-பை’ நகரமாக மாறும் - பரமேஸ்வர் தகவல்

5 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்றும், 4 மாதங்களில் பெங்களூரு ‘வை-பை’ நகரமாக மாறும் என்றும் பரமேஸ்வர் கூறினார்.

Update: 2019-02-25 23:22 GMT
பெங்களூரு,

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

பெங்களூருவில் ‘வை-பை’ வசதிகள் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இன்னும் 4 மாதங்களில் பெங்களூருவில் ‘வை-பை’ வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் உலகிலேயே பெங்களூரு, முதல் ‘வை-பை’ நகரமாக மாறும். பெங்களூருவை பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்று கூட்டணி அரசு சபதம் ஏற்றுள்ளது.

பெங்களூரு, பூங்கா நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது. தொழில்நுட்பம் வந்த பிறகு, நகரில் மக்கள்தொகை அதிகரித்துவிட்டது. இதனால் நகரின் பழம் பெருமைகள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நகரை மேலும் வளர்ச்சி அடைய செய்து, பூங்கா நகரம் என்ற பெருமையை மீட்டெடுப்போம். பெங்களூருவை வளர்ச்சி அடைய செய்வது தான் கூட்டணி அரசின் நோக்கம். கட்சி பேதம் பார்க்காமல் நகரில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.8,015 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பெங்களூருவின் வளர்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படும். ரூ.25 ஆயிரம் கோடி செலவில் நகரின் 4 திசைகளிலும் உயர்த்தப்பட்ட பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் நிறுவனம் ரூ.80 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இன்னும் 6 மாதங்களில் நாகவாராவில் இருந்து சர்வதேச கண்காட்சி மையத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும். இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

முன்னதாக வளர்ச்சி பணிகளை முதல்-மந்திரி குமாரசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்