போரூரில், 184 கார்கள் எரிந்து நாசம்: புற்களில் பிடித்த தீயை உடனே அணைக்காததே பெரும் விபத்துக்கு காரணம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

போரூரில் 184 கார்கள் எரிந்து நாசமான இடத்தில் கூடுதல் கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார். காய்ந்த செடிகள், புற்களில் எரிந்த தீயை உடனடியாக அணைக்காததே இந்த பெரும் விபத்துக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Update: 2019-02-25 23:00 GMT
பூந்தமல்லி, 

சென்னை போரூரில், மவுண்ட்-பூந்தமல்லி சாலையையொட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில், ‘உட்டோ’ என்ற தனியார் கால் டாக்சி நிறுவனத்துக்கு சொந்தமான 211 கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அந்த வளாகத்தை சுற்றிலும் இருந்த காய்ந்த புற்கள், செடிகளில் நேற்று முன்தினம் தீப் பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் அந்த தீ மளமளவென அங்கு நிறுத்தி இருந்த கார்களுக்கும் பரவியது. இதனால் கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் 184 கார்கள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி ஆகியோர் தீ விபத்தில் எரிந்து நாசமான கார்களை நேரில் ஆய்வு செய்தனர். சம்பவ இடம் முழுவதையும் சுற்றி பார்த்தனர்.

பின்னர் அங்குள்ள காவலாளியிடம் விசாரணை செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அந்த காலி மைதானத்தை சுற்றிலும் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. கார்கள் நிறுத்தப்பட்டு உள்ள இடத்தை சுற்றிலும் காய்ந்த செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. அதன் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்து, மளமளவென கார்கள் இருக்கும் பகுதிக்கு தீ பரவி உள்ளது கேமராவில் பதிவாகி உள்ளது.

மைதானத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதியில் உடைக்கப்பட்டு அதன் வழியாக சிலர் மைதானத்துக்குள் புகுந்து மது குடித்துவிட்டு செல்வதும் விசாரணையில் தெரிந்தது.

இரவு நேரங்களில் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும், பேட்டரிகள் திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது தொடர்பான புகார்கள் ஏதும் இல்லை. அதன்பிறகுதான் இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

கார்கள் அருகருகே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டதும், காய்ந்த செடி, புற்களில் எரிந்த தீயை உடனே அணைக்காததும் இந்த பெரிய தீ விபத்துக்கு காரணமாக அமைந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்காமல் காவலாளியே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்தில் எரிந்து போன கார்களுக்கு வரிசைப்படி நம்பர் ஒட்டப்பட்டு உள்ளது. தடய அறிவியல் துறை துணை இயக்குனர் ராஜஸ்ரீ ரகுநாத் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்துக்கான தடயங்களை சேகரித்தார்.

பல மாதங்களாக இந்த கார்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் இந்த கார்களின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி கால் டாக்சி நிறுவன முதன்மை அதிகாரி நாகராஜ், ரூ.14 கோடி மதிப்புள்ள கார்கள் தீயில் எரிந்து நாசமானதாக போரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்சூரன்ஸ் பணத்துக்காக கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்