ஏற்காடு மலையில் 4-வது நாளாக காட்டுத்தீ: 2 கிராம மக்கள் வெளியேற்றம்

ஏற்காடு மலையில் 4-வது நாளாக நேற்று காட்டுத்தீ எரிந்தது. இதையடுத்து 2 கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Update: 2019-02-25 23:00 GMT
ஏற்காடு,

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 22-ந் தேதி மாலை தீப்பிடித்தது. இதில் 60 அடி பாலத்தில் இருந்து 12-வது கொண்டை ஊசி வளைவு வரை இடையே உள்ள மலைப்பாதையோரத்தில் இருந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் அணைக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக ஏற்காடு மலைப்பாதையில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்தது. ஏற்காடு அடிவார பகுதியில் இருந்து 20-வது கொண்டை ஊசி பகுதி வரை தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதையடுத்து ஏற்காட்டில் தண்ணீர் வினியோகம் செய்யும் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தண்ணீரை தீயணைப்பு வாகனங்களில் நிரப்பி தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இதேபோல் வனத்துறையினர் செடிகளை வெட்டி தீ மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தீயில் எரிந்துபோன மரங்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு வருகிறது.

இதனிடையே தீயில் யாராவது சிக்கினால் அவர்களை மீட்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு மீட்புக்குழு வரவழைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கருங்காலி மற்றும் குரும்பப்பட்டி ஆகிய 2 கிராமங்களில் வசித்துவரும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு, பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த மரங்கள் விழுந்தன. இதேபோல் கற்களும் பெயர்ந்து மலைப்பாதை ரோட்டின் குறுக்கே விழுந்தன. இதைத்தொடர்ந்து சேலம் அடிவாரத்தில் இருந்து ஏற்காட்டுக்கு போக்குவரத்து ஏற்கனவே நிறுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் குப்பனூர் வழியாக ஏற்காட்டுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த போக்குவரத்து தடை இன்று வரை இருக்கும் என்றும், தீ கட்டுக்குள் வந்ததும் மீண்டும் போக்குவரத்து இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்காடு மலைப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்