நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற சபதம் ஏற்போம் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற சபதம் ஏற்போம் என வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

Update: 2019-02-25 23:00 GMT
பட்டுக்கோட்டை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பைபாஸ் சாலையில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவச் சிலைகள் திறப்பு விழாவும் மற்றும் 12 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழாவுக்கு பட்டுக்கோட்டை சி.வி.சேகர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுப. ராஜேந்திரன் வரவேற்றார். கு.பரசுராமன் எம்.பி., மா.கோவிந்தராசு எம்.எல்.ஏ., மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரைதிருஞானம், மாவட்ட மாணவர் அணி தலைவர் காந்தி, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் துரைசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து முன்னாள் முதல் அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவச்சிலைகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தன்னுடைய சொந்த நிதியில் இருந்து இடத்தை வாங்கி அங்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளையும், மாவட்டத்திலேயே மிக உயரமான கொடிக்கம்பத்தையும் அமைத்துள்ளார்.

மூத்தமொழியான தமிழுக்கு முதல் அந்தஸ்து வழங்கி தமிழ்நாட்டு மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா எத்தனையோ இடையூறுகளுக்கு பிறகும் கட்சியை காப்பாற்றி முதல் அமைச்சராகி வாழ்நாள் இறுதிவரை தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இந்திய அரசியலில் தமிழகத்தை உற்று நோக்க வைத்த மகத்தான தலைவி ஜெயலலிதா.

தி.மு.க. கோட்டையாக இருந்த சென்னையை அ.தி.மு.க. கோட்டையாக்கினார். மக்களுக்காக பாடுபட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர் ஜெயலலிதா. அவர் மறைவுக்குப் பின் சிலர் தனிக்கட்சி தொடங்கி இந்த இயக்கத்தையும், இந்த ஆட்சியையும் அழிக்கப்பார்க்கிறார்கள். உண்மை விசுவாசிகள் இருக்கும்வரை அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி அமைந்து அசைக்க முடியாத சக்தியை பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் அ.மலைஅய்யன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் உதயகுமார், நகர முன்னாள் செயலாளர் எஸ்.எல்.சிவகுமார், நகர அவைத் தலைவர் முத்துராமன், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாரதி, நகர சபை முன்னாள் உறுப்பினர்கள் ஜி.எம்.பாஸ்கர், பாளையம் ரவி, பி.எஸ்.பிரபு மற்றும் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, திருவோணம், ஒரத்தநாடு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்