சேலம் விழாவிற்கு முதல்-அமைச்சர் வரும் முன் பரபரப்பு: கலெக்டர் அலுவலகம் அருகே மரத்தில் ஏறி விஷம்குடித்த ரவுடி

சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வருவதற்கு முன், கலெக்டர் அலுவலகம் அருகே மரத்தில் ஏறி விஷம்குடித்த ரவுடியை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

Update: 2019-02-25 21:45 GMT
சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மரத்தில் நேற்று காலை ஒருவர் ஏறினார். பின்னர் அவர் திடீரென தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மிரட்டல் விடுத்தார்.

இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்தில் ராணுவ பீரங்கியை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். முதல்-அமைச்சர் விழாவிற்கு வருவதற்கு முன் மரத்தில் ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததை கண்டதும் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அங்கு சென்ற போலீசார் மரத்தின் கீழ் நின்று கொண்டு, அந்த நபரை கீழே இறங்குமாறு அழைத்தனர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து விட்டார். அப்போது அந்த நபர் தன் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்குப்பதிவு செய்து, என் வாழ்க்கையை பாழ்படுத்தி விட்டார்கள். இதனால் எனது குழந்தைகள் தவிக்கிறார்கள் என கூறி அழுதார். இதைக்கேட்ட போலீசார், உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். கீழே இறங்கி வாருங்கள், என தெரிவித்தனர். ஆனால் அவர் கலெக்டர் வந்து குறைகளை கேட்டால் தான் இறங்குவேன், என்றார்.

இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மரத்தில் இருந்தவரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் மரத்தில் ஏணியை வைத்தனர். அப்போது மரத்தில் இருந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு தள்ளாடினார். மேலும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீயணைப்பு வீரர்கள் வலையை விரித்தனர்.

3 வீரர்கள் உடனடியாக மரத்தில் ஏறி அவரை பிடித்துக்கொண்டனர். பிறகு அவரை கயிற்றால் கட்டி ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர், சேலம் பொன்னம்மாபேட்டை கார்பெட் தெருவை சேர்ந்த ரவுடியான ராஜசேகர் (வயது 45) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் சந்துக்கடையில் மது விற்பனை செய்வதாக கூறி சமீபத்தில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அம்மாபேட்டை போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ராஜசேகரை கைது செய்தனர். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த பின்பு பொதுமக்களுக்கு அவர் இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டு, தலைமறைவானதால் ராஜசேகரை தேடி வந்தோம். இந்தநிலையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ரவுடியான இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன, என்றனர்.

மேலும் செய்திகள்