நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் அற்புதம்மாள் வேண்டுகோள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்பட 7 பேரை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக அற்புதம்மாள் தெரிவித்தார்.

Update: 2019-02-25 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. செட்டித்தெரு-மிஷன் வீதி சந்திப்பில் உள்ள தனியார் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக்கழகம் தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார்.

அமைப்பாளர் தந்தைபிரியன், செயலாளர் விஜயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்துகொண்டார். கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகள், இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அற்புதம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறையில் உள்ள எனது மகன் பேரறிவாளனை மாநில அரசு விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவர்னரின் கையெழுத்துக்காக காத்திருக்கிறோம். சட்டப்படி தான் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவை கவர்னர் மதித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் புதுச்சேரி உள்பட 7 நகரங்களில் அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்