மாநில அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை மாநில அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2019-02-25 23:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் சார்பில் இலவச முடநீக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சமூக நலத்துறை அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். கோகுலகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமைச்சர்கள், அதிகாரிகளை அவர்களது அலுவலகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சென்று சந்திப்பதற்கு வசதியாக ரூ.6 கோடி செலவில் 27 அலுவலகங்களில் சுலபமாக செல்வதற்கான வழிப்பாதை அமைத்து வருகின்றோம். ரோமன் ரோலண்ட் நூலகத்தில் கண் பார்வையற்றவர்கள் புத்தகங்களை படிக்க ஏற்பாடு செய்துள்ளோம். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க கோகுல கிருஷ்ணன் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார். அதில் முதல்கட்டமாக தற்போது ரூ.10 லட்சத்திற்கு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் போராடி மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுள்ளோம். 2 மாதத்திற்கான அரிசி வழங்க கோப்புகள் தயார் செய்துள்ளோம். மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைவருக்கும் திட்டங்கள் பாகுபாடின்றி கிடைக்க பாடுபட்டு வருகின்றோம். தினமும் கோப்புகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. இருப்பினும் அதனை சமாளித்து நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வருகின்றோம். இதனால் தான் புதுச்சேரி நிர்வாகம், சுற்றுலா, விவசாயம், கல்வி, மருத்துவம், காவல்துறையில் முதல் இடத்தில் உள்ளது.

தற்போது நரம்பையில் உள்ள ஒரு பள்ளி நீரை சேமிப்பதற்கான திட்டத்தை தயாரித்து கொடுத்து, மத்திய அரசிடம் இருந்து முதல் பரிசு வாங்க உள்ளது. ஆனாலும் மாநில அரசு செய்யும் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசின் திட்டங்களை மறைக்க சில சக்திகள் உள்ளது. இதனை எல்லாம் முறியடிக்கும் காலம் வந்துள்ளது. உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் தொடர்ந்து பல நல்ல திட்டங்களை கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கிராம வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரவி பிரகாஷ், துறையின் இயக்குனர் சாரங்கபாணி, துணை இயக்குனர் சரோஜினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்