மோட்டார் சைக்கிள்- மொபட் மோதி விபத்து, கோவில் பூசாரி உள்பட 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் கோவில் பூசாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கிணத்துக்கடவு,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தையை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது42). கூலி தொழிலாளி. இவருடைய உறவினர் திருமணம் கடந்த 15-ந் தேதி பூராண்டாம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் அவர் கலந்து கொள்ள வில்லை. இதனால்ஆறுச்சாமி, தனது உறவினரான கோவை புலியகுளத்தை சேர்ந்த நாகராஜ் (43) என்பவருடன் நேற்று தனது மொபட்டில் பூராண்டாம்பாளையம் சென்றார். அங்கு அவர்கள் மணமக்களை பார்த்து விட்டு கோவைக்கு மொபட்டில் கிளம்பினார்கள். மொபட்டை ஆறுச்சாமி ஓட்டினார்.
அவர்கள், கொண்டம்பட்டியை அடுத்து கிணத்துக்கடவை நோக்கி வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோவை வெள்ளலூர் செட்டிபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் (46) தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் மொபட்டை ஓட்டி வந்த ஆறுச்சாமி, பின்னால் உட்கார்ந்திருந்த நாகராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுச்சாமி பரிதாபமாக இறந்தார்.
நாகராஜ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன முருகானந்தம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையத்தில் தங்கி கொண்டம்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.