கும்பகோணத்தில், பட்டப்பகலில் நகராட்சி அதிகாரி வீட்டில் 10 பவுன் நகைகள் கொள்ளை

கும்பகோணத்தில், பட்டப்பகலில் நகராட்சி அதிகாரி வீட்டில் ஜன்னல் கம்பிகளை அறுத்து மர்ம நபர்கள் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.;

Update:2019-02-26 04:30 IST
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்லம் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 50). இவர் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி(45). இவர், வணிகவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

நேற்று காலை ராமச்சந்திரன், மாலதி ஆகிய இருவரும் வழக்கம்போல் காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். அவர்களுடைய மகளும், மகனும் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டனர். இதனால் வீடு பூட்டிக்கிடந்தது. இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் ராமலிங்கம் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க வாசல் கதவை திறக்க முயற்சித்தபோது உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் பின்பகுதி வழியாக உள்ளே சென்று பார்த்தபோது பக்கவாட்டு சுவரில் இருந்த ஜன்னலில் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே அறைக்குள் சென்றபோது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 2 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்து 10 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

கும்பகோணம் நகர பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்