பாம்பன் பாலத்தில் நாளை முதல் ரெயில் போக்குவரத்து 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ராமேசுவரத்திற்கு பாம்பன் ரெயில் பாலத்தில் நாளை முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Update: 2019-02-25 23:00 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலில் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்த பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்கு பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4–ந் தேதி விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையாக முடிவடைந்தன.

கடந்த 85 நாட்களுக்கு மேலாக பாம்பன் ரெயில்வே பாலம் வழியாக ராமேசுவரம் வரை ரெயில்கள் போக்குவரத்து நடைபெறமால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மண்டபம் வரையிலும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்தது பாலத்தின் உறுதித்தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து நாளை (புதன்கிழமை) முதல் பாம்பன் ரெயில் பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இருந்தும் வரும் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

மேலும் இதுவரை ரெயில் பாலத்தில் 15 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்த ரெயில்களை 10 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தகவல் ரெயில் கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 85 நாட்களுக்கு பிறகு பாம்பன் ரெயில் பாலம் வழியாக ராமேசுவரத்திற்கு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதால் பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்