மண்டபம் யூனியனில் 3 பள்ளிகளில் 3 பள்ளிகளில் உவர்நீரை நன்னீராக்கும் நிலையம் அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் மண்டபம் யூனியனில் 3 பள்ளிகளில் உவர்நீரை நன்னீராக்கும் நிலையத்தை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.;
பனைக்குளம்,
மண்டபம் யூனியனில் உள்ள அரசு பள்ளி மாணவ–மாணவிகள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் வீதம் 3 பள்ளிகளில் உவர்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன. இதன் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:– மாணவ– மாணவிகளின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்குதல், விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல், கல்வி இடைநிற்றலை தவிர்க்க உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட 14 விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 151 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தங்கச்சிமடம்,கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பன் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் பயன்பெறும் வகையில் உவர்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.