தொடர்ந்து 4–வது நாளாக தாளவாடி வனப்பகுதியில் காட்டுத்தீ
தொடர்ந்து 4–வது நாளாக தாளவாடி வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிகிறது.;
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து உள்ளன. செடி, கொடிகள் கருகி உள்ளன.
இந்த நிலையில் கடந்த 22–ந் தேதி தாளவாடி அருகே கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட மூக்கன்பாளையம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த தீ தமிழக வனப்பகுதிக்கும் பரவியது. தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட பாலப்படுக்கை, ஜீர்கள்ளி, தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட நெய்தாளபுரம், கோடிபுரம், கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கெத்தேசால் ஆகிய வனப்பகுதிகளில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
மலையின் உச்சியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிகிறது. எனவே தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வனத்துறையினர் கையில் பச்சை மரக்கிளைகளை சிறு சிறு கட்டுகளாக கட்டி கொண்டு பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மலையில் ஏறி சென்று தீயை அணைத்து வருகிறார்கள். அவ்வாறு செல்லும் வனத்துறையினருக்கு மலையின் உச்சிப்பகுதியில் குடிநீர் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் தங்களுடன் குடிநீரையும் தூக்கி கொண்டு சென்று தீயை அணைத்து வருகிறார்கள். எனினும் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் காற்று பலமாக வீசி வருவதால் தீ ஒவ்வொரு இடமாக விட்டு விட்டு பரவி வருகிறது.
இதனால் வனத்துறையினர் ஒரு பகுதியில் தீயை அணைத்தால் மற்றொரு பகுதிக்கு தீ பரவி விடுகிறது. எனவே காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.
தொடர்ந்து 4–வது நாளாக தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தில் நேற்று காட்டுத்தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைத்தொடர்ந்து கும்டாபுரம் வனப்பகுதிக்கு சென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் 17–க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தீ காரணமாக கரும்புகை அதிக உயரத்துக்கு எழும்பி வனப்பகுதி முழுவதும் பரவி காணப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தாளவாடி வனப்பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. இங்கு அரியவகை தாவர இனங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது ஏற்பட்டு உள்ள காட்டுத்தீயால் அரியவகை தாவர இனங்கள் அழியும் நிலைக்கு சென்று விட்டது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே காட்டுத்தீ பரவி வருகிறது.
இதே நிலை நீடித்தால் கோடை காலம் முடிவதற்குள் வனப்பகுதி முழுவதுமே எரிந்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. மேலும் காட்டுத்தீ காரணமாக பல்வேறு வனவிலங்குகள் இடம் பெயர்ந்து விட்டன. எனவே காட்டுத்தீ ஏற்பட்டால் உடனே அதை அணைக்க நவீன யுக்தியை கையாள வேண்டும். அதுவும் விரைந்து நடவடிக்கை எடுத்தால் தான் வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் காப்பாற்ற முடியும். எனவே அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி காட்டுத்தீ ஏற்படா வண்ணம் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.