இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்கள் தர்ணா
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது பவானி அருகே உள்ள மேட்டுநாசுவம்பாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது திடீரென அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் பிழைப்புக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பவானி லட்சுமி நகருக்கு வந்தோம். இங்கு சேலம்–கோவை நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ் தடுப்பு அமைத்து குடியிருந்து வருகிறோம். நாங்கள் கியாஸ் மற்றும் மண்எண்ணெய் அடுப்புகளை பழுதுநீக்கும் வேலை செய்து வருகிறோம்.
இலவச வீட்டுமனை கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறோம். கவுண்டம்பாளையம் பகுதியில் இடம் ஒதுக்கி தருவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாலத்துக்கு அடியில் தங்கக் கூடாது என போலீசார் கெடுபிடி செய்ததால், சிலர் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். ஆனால் வசதி இல்லாத சுமார் 25 குடும்பத்தினர், வேறு வழி இல்லாமல் பாலத்துக்கு அடியிலேயே குடியிருந்து வருகிறோம். எங்களிடம் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என அனைத்தும் உள்ளது. ஆனால் குடியிருக்க இடம் மட்டும் இல்லை.
தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும், நேரில் அணுகியும் எந்த பலனும் இல்லாததால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர்.
அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், ‘இங்கு போராட்டம் நடத்தக்கூடாது. எனவே மனுவை கொடுத்துவிட்டு கலைந்து செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மனுவை மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.