கிருஷ்ணகிரியில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் காணொலி காட்சி மூலம் மோடி தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரியில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரபாகர், நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சுசிலா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அசோக்குமார் எம்.பி. பேசுகையில், சிறு குறு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். அதன் தொடக்கமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 13 ஆயிரம் விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவரி பயிர் சுமார் 50 ஆயிரம் ஹெக்டரில் பயிரிடப்படுகிறது. கே.ஆர்.பி. அணை, கெலவரப்பள்ளி அணைகளிலிருந்து தொடர்ந்து தண்ணீர் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதால் விவசாயத்தில் சிறந்து விளங்குகிறது. விவசாயிகள் அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என்றார்.
இதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர் சரவணன், வேளாண்மை துணை இயக்குனர்கள் மோகன் விஜயகுமார், ராஜேந்திரன், அகண்டராவ், பிரதீப்குமார் சிங், முன்னாள் எம்பி. பெருமாள், முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தங்கமுத்து, வெங்கடாசலம், ஜெயபால், நெடுஞ்செழியன், தாசில்தார் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.