ஜல்லிகிரஷர், கல்குவாரியால் பாதிப்பு பொதுமக்கள் புகார்
ஜல்லிகிரஷர், கல்குவாரியால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா குக்கலப்பள்ளி, குட்டப்பள்ளி, திருமலகவுனிகோட்டா ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
குடியிருப்பில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கல்குவாரி ஒன்று பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது கடந்த ஒரு மாதம் முன்பு ஜல்லி கிரஷர் ஒன்றை தொடங்கி உள்ளனர். இவை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு மட்டும் இயங்குகிறது.
ஏற்கனவே கல்குவாரியில் வைக்கும் வெடிகளால் வீடு, பள்ளி மற்றும் கோவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் பிரச்சினை, தூசுகளால் விவசாய பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில், தற்போது ஜல்லி கிரஷரால் இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
மேலும் ஆஸ்துமா போன்ற நோயால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று முழுவதும் தூசியாகி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலை எங்கள் பகுதியில் இல்லை. எனவே இரவில் இயங்கும் ஜல்லி கிரஷர் மற்றும் மாசு ஏற்படுத்தும் கல் குவாரியை தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.