குருவுக்கு சமாதி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட தொழிலாளி மீது தாக்குதல் பரபரப்பு, பதற்றம்

மண்டியாவில், வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் குருவுக்கு சமாதி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டார். இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2019-02-24 23:57 GMT
பெங்களூரு,

மண்டியாவில், வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் குருவுக்கு சமாதி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டார். இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட காலமுட்டனதொட்டி கிராமம் குடிகெரே காலனியைச் சேர்ந்த குரு என்பவரும் ஒருவர் ஆவார்.

வீரமரணம் அடைந்த அவருடைய உடல் மத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கே.எம். தொட்டி அருகே உள்ள மேலஹள்ளி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினமும் ஏராளமானோர் குருவின் வீட்டிற்கும், சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் குருவின் சமாதியை கட்ட அங்கு வந்திருந்த கட்டிட தொழிலாளர்களில் ஒருவர் நேற்று திடீரென ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினார். இதனால் அங்கு குருவின் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்திருந்தவர்களும், அப்பகுதி இளைஞர்களும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அந்த கட்டிட தொழிலாளியை பிடித்து, ‘‘குருவின் உயிரை பறித்த பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம். ஆனால் நீ இங்கிருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்புகிறாய். நீ யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, உன்னுடைய அடையாள அட்டையை எங்களிடம் காட்டு? என்று கூறினர். மேலும், ‘‘பாரத் மாதாகி ஜே’’ என்று கோஷம் போட சொன்னார்கள்.

ஆனால் அவர்கள் சொன்னதை கேட்காமல் அந்த தொழிலாளி தொடர்ந்து ‘‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’’ என்று கோஷங்கள் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து குருவின் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்திருந்த சில இளைஞர்கள், அந்த கட்டிட தொழிலாளியை பிடித்து தாக்கினர். மேலும் அவரை ‘‘பாரத் மாதாகி ஜே’’ என்று கோஷம் எழுப்புமாறு கூறினர்.

அதையடுத்து அந்த தொழிலாளி, ‘‘பாரத் மாதாகி ஜே’’ என்று கோஷம் எழுப்பினார்.

இதுகுறித்து அங்கிருந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டவர் அசாம் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தங்கி கூலி வேலை செய்து வருபவர் ஆவார். அவருடன் அசாம் மாநில தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்கள்தான் குருவின் சமாதியை கட்டி வருகிறார்கள். தற்போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட தொழிலாளிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளோம்’’ என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் ஏதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்