81 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் முதற்கட்ட நிதி - வருவாய் அலுவலர் பார்த்திபன் தகவல்

வேலூர் மாவட்டத்தில் 81 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் முதற்கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தெரிவித்தார்.

Update: 2019-02-24 23:37 GMT
வேலூர்,

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 81 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் முதற்கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறினார்.

‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை உத்தரபிரதேச மாநிலம் கேரக்பூரில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நவீன திரையில் விவசாயிகள் பார்வையிட ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் நிதிஉதவி செலுத்தப்பட்டதற்கான ஆணை வழங்கும் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஐ.சி.சிங், வேளாண் இணை இயக்குனர் சுப்புலட்சுமி, விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கி சிறு, குறு விவசாயிகள் 30 பேரின் வங்கிக்கணக்கில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டதற்கான ஆணையினை வழங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 469 விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பயன்பெற பதிவு செய்துள்ளனர். கடந்த 22-ந் தேதி வரை சுமார் 81 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வங்கிக்கணக்கில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் நிதி உதவி செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை முதல் (அதாவது இன்று) 3 நாட்கள் கிராம நிர்வாக அலுவலகங்களில் நடக்கிறது. இதனை தகுதியுடைய விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் பார்வையிட்டார். தொடர்ந்து அவர், அணைக்கட்டு, கணியம்பாடி வட்டாரங்களை சேர்ந்த உழவர் உற்பத்தி குழுக்களுக்கு மானியவிலையில் 6 டிராக்டர்களை வழங்கினார்.

விழாவில், விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் ஆனந்த், உழவர் பயிற்சி மைய துணை இயக்குனர் பாலா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்