82 ஆயிரத்து 349 விவசாயிகளுக்கு நிதி உதவி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மாவட்டத்தில் 82 ஆயிரத்து 349 விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட உள்ளது என்று மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2019-02-24 23:03 GMT

சிவகங்கை,

மத்திய அரசின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் குறு, சிறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் நாடு முழுவதும் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

அதன்படி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு நிதி உதவியை வழங்கி பேசியதாவது:–

 மத்திய அரசு, கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள், விவசாயப் பணிகளை தடையின்றி மேற்கொள்ள வசதியாக ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. அதன்படி 3 கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஒவ்வொரு விவசாயின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் 5 ஏக்கருக்கு கீழே உள்ள விவசாயிகளை கண்டறிய வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்துறையை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் மிக குறுகிய காலத்தில் விவசாயிகள் குறித்த விவரங்களை பதிவு செய்துள்ளனர். அதில் தற்போது வரை 82 ஆயிரத்து 349 விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிதி உதவியை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். மேலும், 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுப்பட்டாக்களை பாகப்பிரிவினை செய்வதன் மூலம், இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இந்த திட்டத்தில் விடுபட்ட சிறு, குறு விவசாயிகள் தங்கள் பெயரை பதிவு செய்ய, இன்று (திங்கட்கிழமை) முதல் 27–ந்தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை அணுகி மனு செய்யலாம்.

மேலும் பாகப்பிரிவினை செய்து பட்டா மாறுதல் கேட்பவர்களுக்கு வருவாய்துறையின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் செந்தூர்குமரன், வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் காணொலி காட்சி மூலம் திட்டத்தை தொடங்கி வைப்பதை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்