கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6½ கோடி செலவில் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆய்வுக்கூடம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6½ கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை ஆய்வுக் கூடத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2019-02-24 23:00 GMT
கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6½ கோடி செலவில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் புதிதாக நவீன பைப் லைன் கேத் லேப் என்ற அகநாள ஆய்வுக்கூடம், முன்கூட்டியே நோய் கண்டறிதல் பிரிவு, முடநீக்கியல், விபத்தியல் சிகிச்சை மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

புதிய பிரிவுகளை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அவர்கள், ரூ.6½ கோடி செலவில் அதிநவீன விபத்து சிகிச்சை பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, பெண்களுக்கான அம்மா முழு உடல் பரிசோதனை மையம் அமைக்க 3 மாடி கட்டிடம், ரூ.1½ கோடியில் சிறப்பு சிசு பராமரிப்பு பிரிவு உள்பட ரூ.17½ கோடி செலவில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல் -அமைச்சர் சுகாதாரத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட கருவியால் 1,700 பேருக்கு ஆஞ்சியோகிராம், 450 பேருக்கு ஸ்டன்டு மூலம் இதய சிகிச்சையும், 83 பேருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. ரூ.6½ கோடி செலவில் ஆஞ்சியோகிராம் கருவி வாங்கப்பட்டு ஏழை எளிய மக்களும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியால் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 40 லட்சம் தொழிலாளர் குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். இங்கு ரூ.1.80 கோடி செலவில் அதி நவீன சி.டி.ஸ்கேன் கருவி, ரூ.40 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட நவீன சமையல் கூடம் ஆகியவை திறந்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.8 கோடி செலவில் அதிநவீன கேத் லேப் மற்றும் ஒரு நிமிடத்தில் ஸ்கேன் செய்யும் எம்.ஆர்.ஐ எந்திரம் போன்றவை விரைவில் வழங்கப்படும். சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அடுத்தபடியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு தான் பைப் லைன் கேத் லேப் கருவி வழங்கப்பட்டு உள்ளது. ஜைக்கா திட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூ.275 கோடி நிதிஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, தாளியூர் பேரூராட்சி, பூச்சியூரில் ரூ.60 லட்சம் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஸ்ரீ ராம் காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.42 லட்சம் செலவில் சுகாதார மைய கட்டிடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது. இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி, செம்மேடு பகுதியில் ரூ.72 லட்சம் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி, சுண்டக்காமுத்தூரில் 30 படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனையை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், சி.மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, ஆர்.கனகராஜ், மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத், போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் சுவாமிநாதன், மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்