எத்தனை மத அமைப்புகளை அழைத்து வந்தாலும் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு

எத்தனை மத அமைப்புகளை அழைத்து வந்தாலும் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது என்று தஞ்சையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2019-02-24 23:15 GMT
தஞ்சாவூர்,

திராவிடர் கழகம் நடத்தும் மாநாட்டிற்கு நான் எப்போதும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த காலக்கட்டத்திலும் வருவேன். 1976-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு மிசா சட்டத்தில் தமிழக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு இருந்த வீரமணி தான், என்னை கொள்கை வீரனாக பயிற்றுவித்தார். பெரியார் உயிர் பிரிகிற நேரத்திலும், கடைசி வரை தனது சுற்று பயணத்தை நிறுத்தியது கிடையாது. வாழ்நாள் முழுவதும் பயணம் மேற்கொண்டார். பெரியாரிடம் பயிற்சி பெற்றவர் வீரமணி. அவரும் தொடர்ந்து மக்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறார். நானும் உழைக்க ஒரளவு முயற்சி செய்கிறேன்.

தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ திராவிட இயக்கத்தை விட்டால் வேறு எதுவும் கிடையாது. தி.மு.க.வும், தி.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று கருணாநிதி கூறினார். தி.க.வும், தி.மு.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி மட்டும் அல்ல, காவல் தெய்வங்களாக விளங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த 2 கழகங்கள் இருக்கிற வரை எத்தனை காவிகள், மத அமைப்புகள், சாதி அமைப்புகளை கூட்டிக்கொண்டு வந்தாலும் திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.

பெரியாரின் கொள்கைகளுக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்ததற்கு தி.மு.க. ஆட்சி தான் காரணம். இந்த மாநாட்டிற்கு சமூக நீதி மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமூகத்தில் தரைவிரித்து ஆடும் அநீதிகள், ஆக்கிரமிக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த மாநாடு தேவை தான். சமூக அநீதி என்பது மத்திய அரசின் அநீதியாகவும், மாநில அரசின் அநீதியாகவும் மாறி இருக்கிற இந்த காலக்கட்டத்தில் சமூக நீதியை காக்க மாநாடு மட்டும் அல்ல, அதையும் தாண்டி பல போராட்டங்கள் நடத்த வேண்டிய அவசியத்துக்கு வந்துள்ளோம்.

மத்தியில் மோடி தலைமையில் உள்ள அரசு சமூக நீதியை குழி தோண்டி புதைத்துக்கொண்டு இருக்கிறது. அதை நேரடியாக செய்யாமல் முறைமுகமாக, தந்திரமாக செய்கிறது. கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பது தான் சமூக நீதி. ஆனால் அன்றே பொருளாதார ரீதியாக இந்த இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய போது அன்றைய பிரதமர் நேரு மறுத்து விட்டார். ஆனால் அந்த பெருளாதார அளவு கோலை, பிரதமர் மோடி இன்று கொண்டு வந்துள்ளார். இது சமூக நீதி கொள்கையை குழி தோண்டி புதைப்பது ஆகும்.

ஓட்டு, அரசியல் லாபத்துக்காக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று ஓட்டுக்காக மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. ஆனால் விவசாயிகள் டெல்லியில் போராடிய போது மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. 5 மாநில தேர்தலில் தோற்றதால் மக்களை ஏமாற்றி எப்படியாவது ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக ரூ.6 ஆயிரம் வழங்குகிறார்கள். இது பூச்சி மருந்து வாங்க கூட பத்தாது. தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்குகிறது. தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வளவோ சாதனைகள் செய்யப்பட்டன.

ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று எந்தவித முன்னறிவிப்பு இன்றி இரவோடு இரவாக அறிவித்து எங்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டு இப்போது ரூ.6 ஆயிரமா?. இது எதை காட்டுகிறது என்றால் திருட்டுத்தனத்தை காட்டுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. அவர் மீண்டும் பிரதமராக வரும் வாய்ப்பு கிடையாது, அதற்கான சூழல் இல்லை. விரைவில் நாடாளுமன்றத்துக்கு வரப்போகிற தேர்தல் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரப்போகிறது. அதற்கு தி.மு.க. காரணமாக அமையப்போகிறது. பிரதமர் ராகுல்காந்தி தான் என்று நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம். அந்த நிலை உருவாக போகிறது.

நாடாளுமன்றத்துக்கு வராத, உச்சநீதிமன்றத்தையே மிதிக்காத ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. அதிகாரிகளை பந்தாடுகிற, மாநில அரசுகளை மதிக்காத, முதல்-அமைச்சர்களை மதிக்காத மோடி ஆட்சியை அப்புறப்படுத்தும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடியுடன் சேர்ந்துள்ள அனைவரையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம். மதவாத சக்திகளை தேர்தல், பிரசார களத்தில் முறியடிக்க தி.க. இந்த மாநாட்டை கூட்டி உள்ளது. எனவே இன எதிரிகளை வீழ்த்திட வாரீர். தயாராவீர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்