கையுன்னியில் தண்ணீர் வசதி இல்லாத அங்கன்வாடி மையம்
கையுன்னி அங்கன்வாடி மையத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் குழந்தைகள் அவதி அடைந்து வருகின்றனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா கையுன்னியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு கீழ்கையுன்னி, போத்துகுளி, உழுவாடு, பைங்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கன்வாடி மையம் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெற்றோர் கவலை அடைந்தனர்.
எனவே பாதுகாப்பான கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று அரசு தொடக்கப்பள்ளி அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து அக்கட்டிடத்தில் மையம் இயங்கி வருகிறது. ஆனால் போதிய அடிப்படை வசதிகள் இதுவரை செய்யப்படவில்லை. குழந்தைகளுக்கு மதிய சத்துணவு சமைக்க போதிய தண்ணீர் வசதி கிடையாது.
மேலும் குழந்தைகளின் தாகத்தை தணிக்க குடிநீர் வசதியும் இல்லை. இதனால் அவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். வெளி இடங்களில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சமைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் குடிக்க தண்ணீர் வழங்காததால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு அடிக்கடி நோய் வாய்ப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் கழிப்பறைக்கும் தண்ணீர் வசதி இல்லை.
இதனால் குழந்தைகள் இயற்கை உபாதைகள் கழிக்க திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கன்வாடி மையத்துக்கு தண்ணீர் உள்பட அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.