சாகசத்தில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண்மணி
குண்டுவெடிப்பில் சிக்கி காலை இழந்த பெண்மணி பாரா கிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டு அசத்தி இருக்கிறார்.
குண்டுவெடிப்பில் சிக்கி காலை இழந்த பெண்மணி பாரா கிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டு அசத்தி இருக்கிறார். தன்னம்பிக்கையுடன் போராடி பயிற்சி மேற்கொண்டவர், இந்த சாகசத்தில் ஈடுபட்ட முதல் மாற்றுத்திறனாளி பெண்மணி என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகிவிட்டார்.
அவரது பெயர் அம்ரபாலி சவான். 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பில் அம்ரபாலி சவானின் இடது கால் கடும் சேதமடைந்தது. அந்த துயர சம்பவம் பற்றி அவர் கூறுகையில், ‘‘அன்று பேக்கரியில் எனக்கு பிடித்தமான இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனது வலது காலுக்கு அருகில் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந் திருக்கிறது. வழக்கத்தை விட அன்றைய தினம் அசவுகரியமாக உணர்ந்தேன். அதனால் பக்கத்தில் இருந்த வேறொரு மேஜைக்கு இடம் பெயர்ந்து அமர்ந்தேன். பின்னர் என் நண்பருக்கு போன் செய்து அழைத்தேன். துரதிர் ஷ்டவசமாக சில நிமிடங்களில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து விட்டது’’ என்கிறார்.
அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டினர் உள்பட 17 பேர் உயிரிழந்துபோனார்கள். 60 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் அம்ரபாலிக்கு 55 சதவீதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. இடது காலும் பலத்த பாதிப்புக்குள்ளானது. அவரால் எழுந்து நடமாட முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றிருக்கிறார். இடது கால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்ததால் அதனை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு அம்ரபாலி சம்மதிக்கவில்லை. இதை யடுத்து அவருக்கு ஏழு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை அல்லாத 300 சிகிச்சைகளும் நடந்திருக்கிறது. படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்திருக்கிறார். அவருக்கு பாரா கிளைடிங் செய்வதில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. எப்படியாவது வானில் பறந்து சாகசம் செய்ய வேண்டும் என்ற உந்து தலுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். விஜய் சோனி என்பவர் பயிற்சி அளித்திருக்கிறார். ‘‘வழக்கமாக ஒரு நபர் பாரா கிளைடிங் பயிற்சி பெறுவதற்கு 5 நாட்கள் போதுமானது. காலில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் அம்ரபாலிக்கு சுமார் 40 நாட்கள் பயிற்சி வழங்கினேன். அவரும் தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்றார். அது அவருக்கு கடினமாக காலகட்டமாக இருந்தது. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை’’ என்கிறார், விஜய் சோனி.
தீவிர பயிற்சி மேற்கொண்ட அம்ரபாலி, மும்பை அருகில் உள்ள லோனவாலா மலைப் பிரதேச பகுதியில் 2200 அடி உயரத்தில் இருந்து பாரா கிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டு பலருடைய கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.
‘‘பாரா கிளைடிங் உண்மையானதாகவும், நம்ப முடியாததாகவும் இருந்தது. அந்த சாகச அனுபவத்தை விவரிப்பது கடினமானது. அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமானதாக இருந்தது. சாகசம் நிறைவு பெற்றபோதுதான் நான் உயிரோடு இருப்பதையே உணர்ந்தேன். என்னுடைய தன்னம்பிக்கை மீது எனக்குள் நம்பகத் தன்மையும் உண்டானது’’ என்கிறார்.
எவரெஸ்ட் சிகரம் உள்பட உலகின் முக்கிய பகுதிகளில் சாகசங்கள் மேற்கொள்ளவும் அம்ரபாலி திட்டமிட்டிருக்கிறார்.