பிரதமர் கையால் கால்பந்தை பரிசாக பெற்ற தமிழ் சிறுமி வறுமையால் படிப்பை கைவிட்ட அவலம்

பிரதமர் கையால் கால்பந்தை பரிசாக பெற்ற தமிழ் சிறுமி வறுமையால் படிப்பை கைவிட்ட அவலம் நடந்து உள்ளது.

Update: 2019-02-23 23:39 GMT
மும்பை,

மும்பை கிங் சர்க்கிள் பகுதியில் 3 சகோதரிகள் மற்றும் கூலி வேலைபார்க்கும் பெற்றோருடன் நடைபாதையில் வசித்து வருபவள் தமிழ் சிறுமி இருதயமேரி (வயது17). இவர் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்த போது பிரதமர் மோடியின் கையால் கால்பந்தை பரிசாக பெற்றவர்.

மாணவி கால்பந்து விளையாட்டில் பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார். கால்பந்து தவிர இவர் ஆக்கி, கபடி, தடகளம் உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

விளையாட்டில் வெற்றி பெற்று சான்றிதழ்களையும், பதக்கங்களையும் குவித்து உள்ள மாணவி தற்போது பள்ளி கூடத்துக்கு செல்லாமல் உள்ளார். தாராவியில் உள்ள பள்ளியில் படித்து 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இருதயமேரி வறுமை காரணமாக தற்போது பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டு உள்ளார். இதுகுறித்து மாணவி இருதயமேரி கூறியதாவது:-

நாங்கள் நடைபாதையில் வசித்து வருகிறோம். எனவே மாநகராட்சியினர் அடிக்கடி வந்து வீட்டை அப்புறப்படுத்தி சென்றுவிடுகின்றனர். தந்தையும், தாயும் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். நானும் பள்ளிக்கு சென்றுவிடுவதால் மாநகராட்சியினர் வீட்டை காலி செய்துவிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் அடிக்கடி வீட்டை காலி செய்வதால், வீட்டில் இருந்த எனது பல சான்றிதழ்கள் தொலைந்துவிட்டன. பிரதமரின் கையால் வாங்கிய கால் பந்தையும் காணவில்லை. எனவே தான் நான் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து விடுகிறேன். பள்ளிக்கு செல்லவில்லை என்பதால் விளையாட்டு பயிற்சிக்கும் செல்ல முடியவில்லை.

கால்பந்தில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவு. இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சுனிஷ் சேத்ரி போல ஆக வேண்டும் என விரும்பினேன். ஆனால் வறுமையால் அது தடைப்பட்டு நிற்கிறது. ஒருவேளை யாராவது உதவி செய்து நான் பெரிய கால்பந்து வீராங்கனையானால் விளையாட்டு அகாடமி தொடங்கி ஏழை சிறுவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்குவேன். இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

மேலும் செய்திகள்