‘தாலிக்கு தங்கம்’ திட்ட பயனாளிகளிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டதாக புகார்: சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
‘தாலிக்கு தங்கம்’ திட்ட பயனாளிகளிடம் அதிகாரிகள் ரூ.1,000 கேட்டதாக வந்த புகாரையடுத்து சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் பெண்களுக்கு ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘தாலிக்கு தங்கம்’ கேட்டு விண்ணப்பிக்கும் பயனாளிகளிடம் கிராமங்களில் பணியாற்றும் பணிநீட்டிப்பு அதிகாரிகள் மூலம் சமூக நலத்துறை அதிகாரிகள் ரூ.1,000 லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து அந்த அலுவலகத்தில் கடந்த 22–ந்தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், ரொக்க கையிருப்பு மற்றும் அதற்கான ஆவணங்களை சரிபார்த்தனர்.
அப்போது கணக்கில் வராத ரூ.27 ஆயிரத்து 70 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் ஏதும் உள்ளதா? என்று சமூக நலத்துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது என்று போலீசார் தெரிவித்தனர்.