சூர்யகிரண் போர் விமானங்கள் சாகசம் தேஜஸ் விமானத்தில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பறந்தார்

பெங்களூருவில், விபத்தில் சிக்கியதால் விமான கண்காட்சியில் கடந்த 3 நாட்களாக பங்கேற்காமல் இருந்த சூர்ய கிரண் போர் விமானங்கள் நேற்று சாகசம் செய்து காட்டின. தேஜஸ் விமானத்தில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பறந்தார்.

Update: 2019-02-23 23:02 GMT
பெங்களூரு,

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. கடந்த 3 நாட்களாக கண்காட்சியில் இடம்பெற்ற இந்திய ராணுவப்படைக்கு சொந்தமான விமானங்கள் விண்ணில் புகையை கக்கியபடி சாகசங்களை நிகழ்த்தி காட்டியது. இந்த நிலையில், விமான கண்காட்சியின் 4-வது நாளான நேற்றும் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் விண்ணில் பறந்தபடி சாகசங்களை செய்து காட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.

கண்காட்சியின் 4-வது நாளான நேற்று பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் கண்காட்சியில் நடந்தன. குறிப்பாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து விமான கண்காட்சியில் நேற்று கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பறந்து மகிழ்ந்தார்.

இதுதவிர போர் விமானங்களில் இருந்து, இந்திய விமானப்படையைச் சேர்ந்த 8 பெண்கள் பாராசூட் மூலம் விண்ணில் பறந்தபடி கீழே குதித்து சாகசங்கள் செய்து காட்டினர். இது பார்வையாளர்களை மெய்சிலர்க்க வைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக விமான கண்காட்சி தொடங்குவதற்கு முன்பாக கடந்த 19-ந் தேதி சாகச ஒத்திகையில் ஈடுபட்ட சூர்ய கிரண் என்ற 2 பயிற்சி போர் விமானங்கள் வானில் பறந்தபோது மோதிக் கொண்டன. அந்த 2 விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கியதுடன், ஒரு விமானி உயிர் இழந்திருந்தார். இதனால் கடந்த 3 நாட்களாக நடந்த சாகத்தில் சூர்ய கிரண் போர் விமானங்கள் இடம் பெறாமல் இருந்தன.

இந்த நிலையில், 4-வது நாளான நேற்று நடந்த கண்காட்சியில் சூர்ய கிரண் போர் விமானங்கள் சாகசங்கள் செய்து காட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று காலையில் சூர்ய கிரண் போர் விமானங்கள் 14 நிமிடங்கள் வானில் பறந்து சாகசங்கள் செய்து காட்டியது. இந்த சாகச காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. 7 சூர்ய கிரண் போர் விமானங்கள் இந்த சாகசத்தில் ஈடுபட்டன. அதேபோல் தேஜஸ் உள்ளிட்ட போர் விமானங்களும் விண்ணில் பறந்தபடி சாகசங்கள் செய்து காட்டியது பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

இதற்கிடையில், நேற்று விடுமுறை நாள்(சனிக்கிழமை) என்பதால் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கானவர்கள் எலகங்கா விமானப்படை தளத்திற்கு திரண்டு வந்திருந்தனர். ஆனால் காலையில் விமானங்களின் சாகசங்கள் முடிந்த பின்பு, விமானப்படை தளத்திற்கு அருகே வாகன நிறுத்தும் இடத்தில் நின்ற கார்களில் தீப்பிடித்து எரிந்ததால், மாலையில் விமானங்களின் சாகசங்கள் நடைபெறுமா? என்ற சூழ்நிலை உருவானது.

ஆனால் திட்டமிட்டபடி நேற்று மாலை 4 மணியளவில் விமானங்களின் சாகசங்கள் தொடங்கி நடைபெற்றது. பார்வையாளர்கள் சிறிய ஆதங்கத்துடன் போர் விமானங்கள் செய்து காட்டிய சாகசங்களை கண்டு ரசித்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) விமான கண்காட்சியின் நிறைவு விழாவில் கவர்னர் வஜுபாய் வாலா கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் செய்திகள்