நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மாநிலத்தில் கூட்டணி ஆட்சி இருக்காது எடியூரப்பா பரபரப்பு பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மாநிலத்தில் கூட்டணி ஆட்சி இருக்காது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.;

Update: 2019-02-23 22:30 GMT
பீதர்,

பீதர் மாவட்டத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் எடியூரப்பா பேசியதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவதே நமது ஒரே குறிக்கோள். இதற்காக நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொருவரும் பா.ஜனதாவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி. மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான 24 மணி நேரத்தில் மாநிலத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி இருக்காது. குமாரசாமி முதல்-மந்திரி பதவியில் நீடிக்க முடியாது. 6½ கோடி கர்நாடக மக்கள் குமாரசாமியை முதல்-மந்திரியாக்கவில்லை. சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தான் குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினார்கள். 37 எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு குமாரசாமியால் முதல்-மந்திரியாக முடியுமா?். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

பின்னர் குதிரை பேர ஆடியோ விவகாரத்தில் தேவதுர்கா போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து கலபுரகி ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு இருப்பது குறித்து எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

கலபுரகி ஐகோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்திருப்பது மூலம் நியாயம் கிடைத்துள்ளது. நான் கோர்ட்டு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இந்த தீர்ப்பு எனக்கு திருப்தி தந்துள்ளது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்