பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல்

வில்லியனூர் பத்துக்கண்ணு சந்திப்பில் புரட்சிபாரதம் கட்சியினர் பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்து அந்த கட்சியினர் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-02-23 22:45 GMT

வில்லியனூர்,

புதுவை மாநிலத்தில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் தடையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. அவற்றை உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்கள் அகற்றுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சியினர் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக வில்லியனூரை அடுத்த பத்துக்கண்ணு சந்திப்பில் பேனர் வைத்து இருந்தனர்.

இந்த பேனரை நேற்று முன்தின் இரவு மர்ம நபர்கள் கிழித்து விட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலையில் அதை பார்த்த அந்த கட்சியினர் அதிர்ச்சி அடைந்து பத்துக்கண்ணு சந்திப்பில் ஒன்று திரண்டனர். அங்கு அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் உதவி சப்–இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேனர்களை கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்