மழையூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 14 பேர் காயம்

கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-02-23 23:00 GMT
கறம்பக்குடி,

கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் முத்துமாரியம்மன் காப்பு முனி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. போட்டியை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை.

தொடர்ந்து வாடிவாசலில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 810 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். ஜல்லிக்கட்டு மதியம் 4.30 மணி வரை நடைபெற்றது.

சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 3 பேர் அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர் களுக்கும் தங்க நாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், ரொக்க பணம் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டை காண கறம்பக்குடி, மழையூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லாரிகள், சரக்கு வேன்கள், டிராக்டர்கள் போன்றவற்றில் வந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஒரு தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்ட அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவ குழு வினர் பரிசோதனை செய்தனர். அப்போது மிகவும் கூர்மையாக இருந்த சில காளைகளின் கொம்புகள் சரிசெய்யப்பட்ட பின்னர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. இதேபோல மாடுபிடி வீரர்களையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்னரே ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் தாசில்தார் சக்திவேல், வட்டார வளர்ச்சி அதிகாரி நலதேவன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கணேசன், ஊராட்சி செயலாளர் முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்