மலேசியாவில் இருந்து திருச்சிக்கு 1 கிலோ தங்கச்சங்கிலியை விமானத்தில் கடத்தி வந்த பெண் சிக்கினார்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு 1 கிலோ தங்கச்சங்கிலியை விமானத்தில் கடத்தி வந்த பெண் சிக்கினார். பயணிகள் குருவிகளாக செயல்படுகிறார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-02-23 23:00 GMT
திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூர், கொச்சின் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் நேரடியாக இயக்கப்பட்டு வருகின்றன.

சமீப காலமாக திருச்சி விமான நிலையத்திற்கு விமானத்தில் வரும் பெண் பயணிகள் தங்கக்கட்டிகள் மற்றும் அவற்றை ஆபரணமாக தயாரித்து கடத்தி வந்தபோது பிடிபட்டு வருகிறார்கள். கடந்த 20-ந்தேதி மலேசியாவில் இருந்த வந்த விமானத்தில் தஞ்சையை சேர்ந்த சாந்தி என்ற பயணி 100 கிராம் தங்க நகையை கடத்தி வந்ததாக பிடிபட்டார். அதே விமானத்தில் திருச்சியை சேர்ந்த கவிதா என்ற பெண் 99 கிராம் தங்க நகையை கடத்தி வந்ததாக பிடிபட்டார். அதுபோல 19-ந் தேதி 3 பெண்கள் தங்கநகைகளை விமானத்தில் கடத்தி வந்ததாக சிக்கினர். இப்படி கடந்த ஒரு மாதமாக தங்கம் கடத்தலில் பெண்களே ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ‘ஏர்ஏசியா’ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது மலேசியாவை சேர்ந்த பெலிசியா தாஸ் விக்டர் என்ற பெண், உடைமையில் 1 கிலோ 40 கிராம் தங்கச்சங்கிலியை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் ஆன நகையின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

திருச்சிக்கு வரும் மலேசிய விமானத்தில், குறிப்பாக பெண்களே அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பெண்கள், தங்கம் கடத்தல் கும்பலுக்கு ‘குருவி’கள் போல செயல்பட்டு உரிய இடத்தில் அதை ஒப்படைத்து குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெறுவதாக அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே, கடத்தல் கும்பல் யார்? என்றும், அவர்களை இயக்கும் கும்பல் தலைவன் யார்? என்பது குறித்தும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்